தேநீர் ஆறும் முன்னே விக்கெட்… பாபர் அசாமின் பேட்டிங்கை கிண்டல் செய்யும் கிரிக்கெட் ரசிகர்கள்… வீடியோ பார்த்து ஷாக்கான கிரிக்கெட் உலகம்…!!

By Gayathri on ஆவணி 29, 2026

Spread the love

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பாபர் அசாமின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விரல் காயத்தால் முதல் போட்டியில் விளையாடாத அவர், இந்தப் போட்டியில் மீண்டும் களமிறங்கினார். புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தின் பெவிலியனில் இருந்து அவர் பேட்டிங் செய்வதற்காக படிக்கட்டுகளில் இறங்கி மைதானத்திற்குள் நீண்ட தூரம் நடந்து வரும் 31 வினாடிகள் கொண்ட வீடியோவை லார்ட்ஸ் மைதான நிர்வாகம் வெளியிட்டிருந்தது. ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் மிடுக்காக நடந்து வரும் காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இருப்பினும், அவரது பேட்டிங் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் வெறும் 10 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 8 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். இக்கட்டான சூழ்நிலையில் அணியை சரிவிலிருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

   

அவரது இந்த குறுகிய நேர பேட்டிங்கை இணையவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். “அவர் களத்தில் பேட்டிங் செய்த நேரத்தை விட, பெவிலியனில் இருந்து நடந்து வந்த நேரம் தான் அதிகம்” என ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள், “அவர் குடித்துக் கொண்டிருந்த டீ ஆறுவதற்கு முன்பாகவே மீண்டும் பெவிலியனுக்கே திரும்பி வந்துவிட்டார்” என்றும், “இன்னொரு வீடியோ எடுப்பதற்காகவே அவர் சீக்கிரம் திரும்பிவிட்டார்” என்றும் நகைச்சுவையாக கருத்துக்களைப் பதிவு செய்து இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.