உலகப் புகழ்பெற்ற பல்கேரிய நாட்டு ஆன்மீக ஞானியும், தீர்க்கதரிசியுமான பாபா வங்கா (Baba Vanga) கணித்துள்ள எதிர்காலக் கணிப்புகள் தற்போதைய நவீன உலகிலும் பெரும் விவாதங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகின்றன. 1911-ஆம் ஆண்டு வான்கேலியா பாண்டேவா திமித்ரோவா என்ற பெயரில் பிறந்த இவர், தனது சிறு வயதிலேயே ஒரு பெரும் புயலில் சிக்கி பார்வையை இழந்தார். எனினும், இவருக்குப் பிரபஞ்சத்தின் எதிர்காலத்தைக் காணும் அமானுஷ்ய சக்தி இருந்ததாக நம்பப்படுகிறது. 1996-இல் இவர் மறைந்த போதிலும், அவர் விட்டுச் சென்ற கணிப்புகள் உலக நாடுகளை இன்றும் வியப்பிலும் அச்சுறுத்தலிலும் ஆழ்த்தி வருகின்றன.
பாபா வங்கா கடந்த காலங்களில் கூறிய சில கணிப்புகள், அவர் மறைந்த பிறகு அப்படியே துல்லியமாக நடந்தேறியுள்ளது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உதாரணமாக, ரஷ்யாவின் ‘கூர்ஸ்க்’ (Kursk) பகுதி தண்ணீரால் மூழ்கடிக்கப்படும் என 1980-இல் அவர் கூறினார். அதேபோல், 2000-ஆவது ஆண்டில் ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ‘கூர்ஸ்க்’ கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. மேலும், 1989-இல் அவர் “அமெரிக்க சகோதரர்கள் இரும்புப் பறவைகளால் தாக்கப்பட்டு வீழ்வார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். இது 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரங்கள் மீது விமானங்கள் மோதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் துல்லியமாகக் குறிப்பதாக அமைந்து உலகை உலுக்கியது.
பாபா வாங்காவின் கணிப்புகளின்படி, 2028 முதல் 2100 வரையிலான அடுத்த சில தசாப்தங்கள் மனிதகுலத்தின் பெரும் மாற்றத்திற்கான காலமாகும். குறிப்பாக, 2028-இல் புதிய ஆற்றல் மூலம் கண்டறியப்பட்டு உலகப் பசிப் பிணி ஒழியும் என்றும், மனிதர்கள் வெள்ளி கிரகத்தை அடைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து 2046-இல் செயற்கை உடல் உறுப்புகள் பெருமளவில் மனிதர்களுக்குப் பொருத்தப்படும் என்றும், 2076-இல் வர்க்கப் பிரிவினைகள் முற்றிலும் அழியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. விண்வெளிப் பயணத்தில் மைல்கல்லாக, 2100-ஆம் ஆண்டில் பூமியின் இருண்ட பகுதிக்கு வெப்பம் தருவதற்காகச் செயற்கைச் சூரியன் உருவாக்கப்படும் என்ற வியக்கத்தக்க கணிப்பும் இதில் அடங்கும்.
விண்வெளி மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் (Aliens) குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் மேலும் விசித்திரமானவை. 2130-ஆம் ஆண்டில் வேற்றுக்கிரகவாசிகளின் உதவியுடன் கடலுக்கடியில் மனித சமூகங்கள் வாழத் தொடங்கும் என்றும், 2183-இல் செவ்வாய்க் கிரகத்தில் குடியேறும் மனிதர்கள் தங்களுக்கான தனி இறையாண்மையைக் கோருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2288-இல் காலப் பயணம் (Time travel) சாத்தியமாகும் என்றும், 2480-இல் இரண்டு செயற்கைச் சூரியன்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் உலகமே இருளில் மூழ்கும் என்றும் அவரது எதிர்காலப் பட்டியல் நீள்கிறது.
இறுதியாக, 3005 முதல் 5079 வரையிலான காலகட்டம் மனிதகுலத்தின் இறுதிப் பயணத்தைக் குறிப்பதாக அமைகிறது. 3797-இல் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்து மனிதர்கள் புதிய விண்மீன் மண்டலங்களுக்குக் குடிபெயர்வார்கள் என்றும், 4599-இல் மனிதர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு (Immortality) வாழ்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இறுதியில், 5076-இல் பிரபஞ்சத்தின் எல்லை கண்டறியப்பட்டு, 5079-இல் இந்த உலகம் முற்றிலுமாக முடிவுக்கு வரும் (End of the world) என்று பாபா வங்கா கணித்துள்ளார். இந்தக் கணிப்புகள் பலருக்கு வியப்பை ஏற்படுத்தினாலும், அறிவியலாளர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் இதனை வெறும் தற்செயல் நிகழ்வு என்றும், நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப அவரது வார்த்தைகள் மாற்றிப் புரிந்து கொள்ளப்படுகின்றன என்றும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
