தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அண்ணாமலையின் இந்த திடீர் முடிவு சாதாரணமான ஒன்றல்ல, இதற்குப் பின்னால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிகப்பெரிய அரசியல் திட்டம் ஒளிந்திருக்கிறது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் மாறியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, நடிகர் விஜய் தனது அரசியல் வருகை மூலம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக, அதிமுக தனது எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக்கூட இழந்து தடுமாறி வருகிறது. இந்தச் சூழலில், தமிழக இளைஞர்கள் பாரம்பரியக் கட்சிகளைத் தவிர்த்து புதிய கட்சிகளின் மீது ஆர்வம் காட்டி வருவதால், அந்த அரசியல் இடைவெளியைப் பயன்படுத்தி தமிழகத்தில் எப்படியாவது கால் பதிக்க அண்ணாமலை திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக ஒரு தலைவர் கட்சியிலிருந்து விலகுகிறார் என்றால், அவர் பொதுவெளியிலோ அல்லது ஊடகங்கள் வாயிலாகவோதான் தனது ராஜினாமாவை அறிவிப்பார். ஆனால் அண்ணாமலையோ, பாஜகவின் முக்கியத் தலைவரான அமித் ஷாவின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று பேசியுள்ளார். அமித் ஷாவின் அனுமதியுடனும், பிரதமர் மோடியின் ஆசீர்வாதத்துடனும் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புதான் தற்போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத, ஆனால் அவர்களின் முழு கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒரு புதிய “அரசியல் முகமூடி” என்ற விமர்சனத்தை வலுப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “2002 முதல் 2026 வரை அனைத்து அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத ஆர்எஸ்எஸ்-பாஜக அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டது. பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம், ஆனால் கொள்கையும் நோக்கமும் பழையதுதான். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘பிளான் பி’ (Plan B) தான் இது. முகமூடி மாறினாலும் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள். எச்சரிக்கையாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த புதிய நகர்வு, தமிழகத்தில் தாமரையை மலர வைக்க ஆர்எஸ்எஸ் தீட்டிய கூட்டுச் சதி என்றே அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர்.
