காவல்துறை மற்றும் அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும், பாம்பன் சாலைப் பாலத்தில் நின்றபடி ஐயப்ப பக்தர்கள் பழைய வேஷ்டிகள் அல்லது துணிகளைக் கடலில் வீசி எறியும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, தங்கள் பழைய துணிகளைக் கடலில் கைவிடுவது ஒரு பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது. ஆனால் பாலத்தின் இருபுறமும் கடலில் வீசப்படும் துணிகள் கடலோரப் பகுதியிலும், பவளப் பாறைகள் உள்ள பகுதிகளிலும் சேர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
Pamban is one of the most beautiful and unique places in Tamil Nadu. It is an ecologically sensitive region and a vital livelihood zone for local communities.
Careless acts like these are destroying Pamban’s fragile ecosystem.
— Namma Kovai (@NammaCoimbatore) December 15, 2025
பாலத்தில் நின்றுகொண்டு துணிகளை எறிவது மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக அமைகிறது. இந்தச் செயல்களைத் தடுக்கக் காவல்துறை சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் பாரம்பரிய நம்பிக்கைகளைத் தொடர்ந்தாலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வீசப்பட்ட பழைய வேஷ்டிகள், துணிகள் மற்றும் இதர கழிவுகள் கடலோரப் பகுதிகளில் மிதந்து, மீனவர்களின் மீன்பிடி வலைகளில் பெருமளவில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பிளாஸ்டிக் மற்றும் துணிக் கழிவுகளால் கடல் சுற்றுச்சூழல் மாசுபடுவதால், அப்பகுதியில் மீன் வளம் குறைந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது
