இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மிக முக்கியமான மருத்துவ காப்பீட்டு திட்டம் தான் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம். சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்குவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமாக கருதப்படும் இந்த திட்டத்தில் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் மக்கள் அதாவது 55 கோடி பேர் பயனடைவார்கள். தற்போது 70 வயதுக்கு மேற்பட்டோரும் இதில் பயனடையலாம்.
தேசிய சுகாதாரக் கொள்கை 2017 இன் கீழ் அனைவருக்கும் மருத்துவக் கவரேஜ் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. ஏழை மக்களுக்கு தேவையான சிகிச்சை சரியாக கிடைக்கும். இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் உறுதி செய்யப்படும். தொற்றாத நோய்களுக்கு தேவையான சிகிச்சை , அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நோயறிதல் சேவைகளும் இலவசமாக கிடைக்கும். மருத்துவமனையில் அனுமதி ஆகும் போது குடும்பத்திற்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடு இதன் மூலம் கிடைக்கும்.
யாருக்கெல்லாம் காப்பீடு கிடைக்கும்?
இந்தத் திட்டத்தில் தகுதி பெற சில குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். கிராமப்புறத்தில் இருப்போரில் பட்டியல் ஜாதி மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள், யாசகம் பெறுவோர், பதினாறு முதல் 59 வயதுடைய நபர்கள் இல்லாத குடும்பங்கள், குறைந்தபட்சம் ஒரு மாற்றுத்திறனாளியை கொண்ட குடும்பம், தினசரி வேலை செய்யும் நிலமற்ற குடும்பங்கள், பழங்குடியின குடும்பங்கள், கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டோர் மற்றும் ஒற்றை அறை கொண்ட வீடுகளில் வாழும் குடும்பங்கள் உள்ளிட்ட பிரிவினர் இந்த திட்டத்தின் கீழ் பகுதி பெற முடியும்.
நீங்கள் இந்த திட்டத்திற்கு தகுதி உள்ளவர்களா என்பதை ஆன்லைன் மூலம் சரி பார்க்கலாம். இதற்கு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று Am I Eligible என்பதை கிளிக் செய்ய வேண்டும். மொபைல் எண் மற்றும் கேப்சாவை டைப் செய்து மொபைலுக்கு வரும் ஓடிபி பதிவிட்டு தேவையான தகவல்களை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும். பிறகு நீங்கள் நீங்கள் தகுதியானவர்களா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எப்படி அப்ளை செய்வது?
நோய்வாய்ப்பட்ட நபரை அருகே உள்ள PMJAY Kiosk க்கு அழைத்துச் செல்லவும். உங்களுடைய ஆதார் அல்லது ரேஷன் அட்டை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெரும் நபராக இருந்தால் அவர்களே உங்களுக்கு திட்டத்திற்கான ஐடியை தந்து விடுவார்கள். அதை வைத்து நீங்கள் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.