தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் உடன் திருப்பாச்சி திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த யுகேந்திரன் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கோட் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.
இது குறித்து அவர் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு நானும் விஜய்யும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பல வருடங்களுக்குப் பிறகு அவரை சந்திக்க செல்வதால் என்னுடன் ஆன பழைய நினைவுகள் அவருக்கு இருக்குமா? அவர் என்னிடம் எப்படி பழகுவார் உள்ளிட்ட பல யோசனைகள் என் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் நாம் எதையும் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம் நாம் அங்கு செல்வோம், நம்முடைய வேலையை பார்ப்போம் என்று நினைத்தேன்.
சென்னையில் நடந்த படப்பிடிப்பில் முதல் நாள் கலந்து கொள்ள சென்றேன். அங்கு நான் சென்றவுடன் என்னை பார்த்த விஜய், வேகமாக வந்து கட்டிப்பிடித்து எப்படி இருக்கீங்க பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது என்று கூறினார். அதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. 15 வருடங்கள் கழித்தும் அப்போது இருந்தது போலவே எப்போதும் அவர் இருக்கிறார் விஜய் மாறவே இல்லை. கோட் திரைப்படத்தில் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் விஜய் உடன் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என யுகேந்திரன் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.