“நரைத்த முடி.. வெள்ளை சட்டை.. திடீரென மயங்கி விழுந்த முதியவர்”…. அடுத்த நொடியே அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்…!

By Nanthini on சித்திரை 13, 2026

Spread the love

அரசியல் களம் பொதுவாக வாக்கு சேகரிப்புகளாலும், அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும் நிறைந்திருக்கும். ஆனால், திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டசபை தொகுதியில் மனிதாபிமானம் கலந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அவிநாசி தொகுதியின் திமுக வேட்பாளரான 28 வயது இளம் மருத்துவர் கோகிலாமணி, நேற்று தேக்கலூர் சமத்துவபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தனது தொகுதிக்கு யார் வேட்பாளராக வந்திருக்கிறார்கள் என்பதை அறியும் ஆர்வத்தில், தள்ளாடும் வயதிலும் ஒரு முதியவர் தனது மனைவியுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.

வெள்ளை சட்டையும், நரைத்த முடியுமாகத் தட்டுத்தடுமாறி வந்த அந்த முதியவர், திடீரென நிலைகுலைந்து தரையில் மயங்கி விழுந்தார். இதைக் கண்டு பதறிய அவரது மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். அந்தச் சூழலில், தனது அரசியல் பிரச்சாரத்தை அப்படியே பாதியிலேயே நிறுத்திவிட்டு, மக்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அந்த முதியவரை நோக்கி ஓடிச் சென்றார் டாக்டர் கோகிலாமணி. தரையில் கிடந்த முதியவரின் தலையைத் தாங்கிப் பிடித்து, “பதற்றப்பட வேண்டாம்.. ஒன்னும் இல்லை.. சரியா..” என்று அன்பான வார்த்தைகளால் அவருக்கு ஆறுதல் கூறினார்.

   

அடிப்படையில் மருத்துவரான கோகிலாமணி, உடனடியாக முதியவரைப் பரிசோதித்ததில் அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. தாமதிக்காமல் அவருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகளை அங்கேயே வழங்கிய அவர், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அந்த முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஒரு வேட்பாளர் என்பதையும் தாண்டி, ஒரு மருத்துவராகத் தனது கடமையைச் செவ்வனே செய்த கோகிலாமணியின் இந்தச் செயல், அங்கிருந்த பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முறையான சிகிச்சைக்குப் பிறகு அந்த முதியவர் தற்போது நலமுடன் உள்ளார்.

   

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. “வாக்கு கேட்பதை விட ஒரு உயிரைக் காப்பதே முக்கியம்” எனச் செயல்பட்ட இளம் வேட்பாளர் கோகிலாமணிக்கு இணையதளவாசிகள் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர். அவிநாசி தொகுதியில் அதிமுக சார்பில் மத்திய அமைச்சர் எல். முருகன், நாம் தமிழர் கட்சியின் மேனகா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கமலி என நால்முனைப் போட்டி நிலவும் சூழலில், கோகிலாமணியின் இந்த மனிதாபிமானச் செயல் தொகுதி மக்களிடையே அவருக்குத் தனி நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.