குன்றத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நீலகண்டன் என்ற ஆட்டோ ஓட்டுநர், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலைக்கு அருகில் உள்ள திறந்தவெளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மது அருந்திக் கொண்டிருந்தபோது பயங்கரமாகத் தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டுத் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துத் திருமுடிவாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், நீலகண்டனுடன் மது அருந்தச் சென்ற அவரது நண்பர்களான சஞ்சய், குகன், கார்த்திக் மற்றும் தங்கராஜ் ஆகியோரே இந்தத் தாக்குதலை நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கொலைக்கான திடுக்கிடும் காரணம் வெளியானது. கொல்லப்பட்ட நீலகண்டன் முன்பு சஞ்சயின் தங்கையைக் காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணமாகிய பின்பும் அவர் தொடர்ந்து அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். பலமுறை எச்சரித்தும் கேட்காததால் ஆத்திரமடைந்த சஞ்சய், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி நீலகண்டனை மது அருந்த அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். குற்றவாளிகளிடமிருந்து ஆட்டோ மற்றும் அலைபேசிகளைப் பறிமுதல் செய்த போலீசார், அவர்களைச் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
