இந்த காலத்திலும் இப்படி ஒரு மகனா என ஆச்சரியப்பட வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இப்போதெல்லாம் வயதாகி விட்டாலே முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள். ஆனால், இப்படி ஒரு மகனா என்று மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஆந்திர பிரதேசம் மாநிலம் எர்ணகுடம் கிராமத்தை சேர்ந்தவர் மசகா கோபி (52). இவர் ஆட்டோ ஓட்டுபவர். இவரது தாயின் பெயர் சத்யாவதி. 2012 இல் தனது கணவரை இழந்த சத்தியவதி பெரும் மன வழியிலும் தனிமையிலும் வாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது மகன் ஆட்டோ ஓட்ட சென்றால் தான் உணவே உண்ண முடியும். இருந்தாலும் மகன் ஆட்டோ ஓட்டச் சென்றவுடன் மிகவும் கவலைக்கு உள்ளாகியுள்ளார். காரணம், மகனுக்கு ஏதாவது நடந்து விடுமோ, ஆட்டோ ஓட்டப் போகும்போது சாலையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற பயத்திலேயே இருந்துள்ளார்.
அந்த பயமே அவர் உடல் நலத்தை கெடுத்து விட்டது. சரியாக சாப்பிடாமல் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். அப்போது மகன் என்னம்மா ஆனது என்று கேட்டபோது எனக்கு உன்னுடனே இருக்க வேண்டும் எங்கு போனாலும் என்னையும் அழைத்துச் செல் என்று கூறியுள்ளார். நீ வேலைக்கு சென்றவுடன் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது என்று கூறியுள்ளார். அன்றிலிருந்து மகன் கோபி ஆட்டோவில் எங்கு சென்றாலும் சவாரிக்கோ, அருகில் உள்ள கிராமத்திற்கோ எவ்வளவு தூரம் சென்றாலும் அம்மாவை கூடவே கூட்டிக் கொண்டுதான் செல்கிறாராம். 1நாள். 2நாள் அல்ல கிட்டத்தட்ட 10 வருடங்களாக.
பலபேர் நீ உன்னோட அம்மாவ ஆட்டோவில் கூட்டிக் கொண்டு செல்வதால் பல சவாரிகள் உன்னை விட்டு செல்கின்றன என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள். இருந்தாலும் தாயின் முகத்தில் தெரியும் புன்னகைக்காக இன்றுவரை வேலைக்கு செல்லும்போதெல்லாம் ஆட்டோவில் தாயையும் கூட்டிக் கொண்டுதான் செல்கிறாராம். இதைக் குறித்து சத்யாவதியிடம் கேட்டபோது, என் கணவர் இறந்த பிறகு நான் மிகவும் மன உளைச்சலில் இருந்தேன். ஆனால், என் மகனுடன் இருக்கும்போது ஒரு நிம்மதி, அவன் உடனே இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அவன் கூடயில்லாத போது பலவீனமாக உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோபியிடம் கேட்டபோது என்னை சிறுவயதில் இருந்து மிகவும் கவனமாக வளர்க்கப்பட்டேன் என்று என் அம்மா அடிக்கடி கூறுவார். அதே போல் இப்பொழுது என் தாயை நான் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்தகாலத்தில் இப்படி ஒரு பாசப்பிணைப்பா தாயின் மகனின் பாசப் போராட்டத்தில் மனமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
