ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள குதா கோர்ஜி பகுதியில், 2 மாதமே ஆன பெண் குழந்தைக்கு அவளது சொந்த அத்தையே நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பிஞ்சு குழந்தையின் காலை, அவளது அத்தை இரக்கமின்றி திருகி உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். குடும்பப் பகை மற்றும் பொறாமை காரணமாகவே அந்தப் பெண் இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், கடந்த சில நாட்களாகவே தன் குழந்தை தொடர்ந்து அழுது வந்ததால் சந்தேகமடைந்தார். குழந்தையின் உடலை ஆடைகளைக் களைந்து சோதித்துப் பார்த்தபோது, பல இடங்களில் நகக்கீறல்களும் காயங்களும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தன் கணவரின் சகோதரி மீது சந்தேகம் இருந்தபோதிலும், முறையான ஆதாரம் இல்லாததால் யாரையும் நேரடியாகக் குற்றம் சாட்ட விரும்பாத தாய், உண்மை என்ன என்பதைக் கண்டறிய ரகசியமாக அறையில் ஒரு கண்காணிப்பு கேமராவை பொருத்தினார்.
அறையில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அறியாத அந்த அத்தை, வழக்கம்போல குழந்தையைத் துன்புறுத்த உள்ளே நுழைந்தார். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் காலை அவர் கொடூரமாகத் திருகி உடைக்கும் காட்சிகள் கேமராவில் அப்படியே பதிவாகின. இதன் மூலம் குழந்தையின் தாய் தன் நாத்தனாரை ஆதாரத்துடன் கச்சிதமாகப் பிடித்தார். உடனே இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையைத் துன்புறுத்திய குற்றத்திற்காக அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
