மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிஎஃப் சந்தாதாரர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பல ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கும் பிஎஃப் கணக்குகளில் உள்ள தொகையை, சந்தாதாரர்கள் விண்ணப்பிக்காமலேயே நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளுக்குத் தானாகவே வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறிப்பாக, 1,000 ரூபாய்க்கும் குறைவாக இருப்பு உள்ள மற்றும் 36 மாதங்களுக்கு மேலாகப் பங்களிப்பு இல்லாத சுமார் 7.16 லட்சம் கணக்குகள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தத் தொகை சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும்.
மேலும் வேலை மாற்றம், ஓய்வு அல்லது மிகச் சிறிய தொகை என்பதால் கவனிக்கப்படாமல் விடப்பட்ட கணக்குகளில் உள்ள பணத்தை உரியவர்களிடம் சேர்க்கும் நோக்கில் இந்தச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காகச் சந்தாதாரர்கள் எந்தவொரு படிவத்தையும் சமர்ப்பிக்கவோ அல்லது அலுவலகங்களுக்கு நேரில் செல்லவோ தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒருவேளை சந்தாதாரர் உயிரிழந்திருந்தால், அந்தத் தொகை அவர்களின் வாரிசுகள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட நபர்களிடம் முறையாக ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 31.86 லட்சம் கணக்குகள் செயல்படாமல் இருப்பதாகவும், அவற்றில் பல்லாயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகை உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
