காசிமேடு முதல் மல்லிப்பட்டினம் வரை… தமிழக கடல் மீன்களில் கலந்திருக்கும் ஆபத்தான உலோகங்கள்… ஆய்வில் வெளியான பகீர் தகவல்….!

By Nanthini on கார்த்திகை 18, 2026

Spread the love

புரதச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆரோக்கிய உணவாகக் கருதப்படும் கடல் மீன்களில், மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கன உலோகங்கள் அதிகளவில் கலந்திருப்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியல் மேம்பட்ட ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள், தமிழகத்தின் முக்கிய மீன்பிடி மையங்களான சென்னை காசிமேடு, கடலூர் உப்பனாறு, நாகப்பட்டினம் வேளாங்கண்ணி மற்றும் தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் ஆகிய நான்கு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். கானாங்கெளுத்தி, மத்தி, வவ்வால், சீலா, நெத்திலி உள்ளிட்ட 20 மீன் மாதிரிகள் மற்றும் கடலடி மண் மாதிரிகளைப் பரிசோதித்ததில், ஈயம், துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்பு ஆகிய உலோகங்களின் செறிவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, காசிமேடு மீன்களில் ஈயம் மற்றும் துத்தநாகமும், மல்லிப்பட்டினம் மீன்களில் இரும்பு மற்றும் தாமிரமும் அதிகளவில் பதிவாகியுள்ளன.

நீண்ட காலத்திற்கு இந்த மீன்களை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயத்தைக் கணக்கிடும் ‘சுகாதார அபாயக் குறியீடு’ (Hazard Index), ஆய்வு செய்யப்பட்ட நான்கு இடங்களிலும் பாதுகாப்பான அளவான 1-ஐத் தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மல்லிப்பட்டினம் அதிகபட்சமாக 3.48 என்ற மதிப்பையும், உப்பனாறு 2.50, வேளாங்கண்ணி 2.21 மற்றும் காசிமேடு 1.91 என்ற மதிப்புகளையும் பெற்றுள்ளன. தினமும் சராசரியாக 57.5 கிராம் மீன் உட்கொள்ளும் 55.9 கிலோ எடையுள்ள ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் விதிகளின்படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், மனித உடலுக்குள் செல்லவே கூடாத ஆபத்தான உலோகமான ஈயமும், இரும்பும் சுகாதார அபாயத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

   

கடலோரப் பகுதிகளில் பெருகி வரும் தொழிற்சாலைக் கழிவுநீர், துறைமுக நடவடிக்கைகள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் நகர்ப்புறக் கழிவுகளே மீன்களில் கன உலோகங்கள் கலப்பதற்கு முதன்மைக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. காசிமேடு பகுதியில் படகுகளுக்குப் பூசப்படும் ரசாயன வண்ணப்பூச்சுகளால் துத்தநாகமும், உப்பனாறு பகுதியில் சிப்காட் தொழிற்சாலைக் கழிவுகளால் கடலடி மண்ணில் ஈயமும் அதிகமாகச் சேர்ந்துள்ளன. கடலின் அடிப்பகுதியில் படியும் இந்த ரசாயனக் கழிவுகளை உட்கொள்ளும் சிறிய உயிரினங்களை உண்பதாலும், கடலடிப் படிவுகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாலும், ஆழ்கடல் மற்றும் அடிப்பகுதி மீன்களில் இந்த நச்சு உலோகங்கள் எளிதில் தங்கிவிடுகின்றன.

   

மருத்துவ ரீதியாகப் பார்க்கும்போது, துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்பு ஆகியவை உடலுக்கு மிகக் குறைந்த அளவில் தேவைப்பட்டாலும், அவை அளவுக்கு அதிகமாகச் சேரும்போது உள்ளுறுப்புகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆனால், ஈயம் உடலில் சேர்வது மிகவும் ஆபத்தானது; இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிப்பதோடு, பெரியவர்களுக்குக் கடுமையான வயிற்று வலியையும் ஏற்படுத்தும். மேலும், ஈயம் கலந்த உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வது சிறுநீரகம், கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளை மேற்கோள்காட்டி ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 

இருப்பினும், இந்த ஆய்வு முடிவுகளை வைத்து அப்பகுதிகளில் விற்கப்படும் அனைத்து மீன்களும் சாப்பிடத் தகுதியற்றவை என உடனடியாக முடிவுக்கு வர முடியாது என ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மீன்களில் ஈயத்தின் உச்சவரம்பை ‘ஒரு கிலோவுக்கு 0.3 மில்லி கிராம்’ என நிர்ணயித்துள்ள நிலையில், இந்த ஆய்வின் முடிவுகள் ‘லிட்டருக்கு மில்லி கிராம்’ என்ற அளவில் கணக்கிடப்பட்டுள்ளதால் இரண்டையும் நேரடியாக ஒப்பிட இயலாது. அதேபோல், இந்த ஆய்வு புற்றுநோய் அபாயத்தை நேரடியாகக் கணக்கிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருப்பினும், தமிழகக் கடலோரப் பகுதிகளில் அதிகரித்து வரும் கடல் மாசுபாட்டிற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு அழுத்தமாக உணர்த்தியுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலப்பதைத் தடுப்பது, துறைமுகங்களில் முறையான கழிவு மேலாண்மையைச் செயல்படுத்துவது மற்றும் மீன்களில் உள்ள கன உலோகங்களின் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். இதன் மூலமே கடல் வளங்களையும், அதை நம்பியிருக்கும் பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்.