“காதல் திருமணம் செய்த தங்கை மகள்… துப்பாக்கியோடு பாய்ந்த மாமா”… போலீசார் வர்றதை பார்த்து காட்டுக்குள் செய்த பகீர் காரியம்….!

By Nanthini on ஆனி 11, 2026

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை பாடநூர் அருகே கீழ்காடு மாஞ்சான்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தேவேந்திரன் – சித்ரா தம்பதியினர். இவர்களது மூத்த மகளான 23 வயதுடைய அஞ்சலி, சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அப்போது, அதே கல்லூரியில் பயின்ற தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவருடன் அஞ்சலிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர, இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.

   

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டது. பின்னர் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த இவர்களுக்கு, சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. பேரக்குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் மனம் மாறிய அஞ்சலியின் தாய் சித்ரா, தன் மகளையும் குழந்தையையும் ஏலகிரி மலையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

   

மகள் மற்றும் குழந்தையுடன் சித்ரா ஊருக்கு வந்ததைக் கண்ட அவரது அண்ணன் கிருஷ்ணன் கடும் ஆத்திரமடைந்துள்ளார். “எங்களுக்குத் தெரியாமல், எங்களைக் கேட்காமல் எதற்காக உன் மகளை இங்கு அழைத்து வந்தாய்? காதல் திருமணம் செய்தவர்களுக்கு இந்த வீட்டில் இடமில்லை” என்று கூறி சித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அஞ்சலியைத் தாக்கியுள்ளார். இருதரப்பிற்கும் இடையே கைகலப்பு முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற மாமா கிருஷ்ணன், வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து அஞ்சலியைச் சுட்டுக் கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினரும் உறவினர்களும் உடனடியாக கிருஷ்ணனைத் தடுத்து, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

இதுகுறித்து அஞ்சலி ஏலகிரி மலை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதை அறிந்த கிருஷ்ணன், அத்தாட்சியை மறைப்பதற்காகத் துப்பாக்கியை உடைத்து அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குள் வீசியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏலகிரி மலை காவல் ஆய்வாளர் பாரதி, கிருஷ்ணனைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றார். மேலும், காட்டுப் பகுதியில் உடைத்துப் போடப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். காதல் திருமணம் செய்த தங்கை மகளையே தாய்மாமன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.