“கரூர் சம்பவம் போல நடந்திருக்கும்”…. நூலிழையில் தப்பிய திருமாவளவன்… பின்னணியில் பெரும் அரசியல் சதி?…. விசிக பரபரப்பு புகார்….!

By Nanthini on ஆவணி 27, 2026

Spread the love

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் ‘தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு’ நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட இம்மாநாட்டில், மேடையில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலால் திருமாவளவன் மூச்சுத்திணறி மயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். சூழலின் தீவிரத்தைப் உணர்ந்து, கரூர் துயரச் சம்பவம் போன்று ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத் தமது உரையை அவர் மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டு வெளியேறினார். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் விசிக சார்பில் பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், மாநாட்டு மேடையில் ஏற்பட்ட நெரிசல் இயல்பாக நடந்த ஒன்று போலத் தெரியவில்லை என்றும், சமூக விரோதிகள் சிலரால் திட்டமிட்டுத் தூண்டிவிடப்பட்ட சதி போலத் தோன்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத சில நபர்கள் திருமாவளவனைத் தாக்க முயன்றதற்கான வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அப்புகாரில் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

   

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, எம்பி திருமாவளவனின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் விசிக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டு நெரிசலுக்குப் பின்னணியில் சதித்திட்டம் இருப்பதாக விசிகவினர் காவல் துறையில் புகார் அளித்துள்ள விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.