தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்பட்டு வரும் சூழலில், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் சர்ச்சை பேச்சுக்களும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்களாக’ அதிக அளவில் பரவி வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சி தரப்பும் தங்களது அதிருப்தியை சபாநாயகரிடம் வெளிப்படுத்தியதை அடுத்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண சட்டப்பேரவை செயலகம் புதிய நடைமுறைகளை ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, பேரவை நிகழ்வுகளை உடனுக்குடன் நேரலை செய்யாமல், 5 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதப்படுத்தி ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் உரையாடல்கள் அல்லது தர்மசங்கடமான காட்சிகளை நேரலை ஒளிபரப்பில் இருந்து தணிக்கை செய்து நீக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான தொழில்நுட்பச் சோதனைகள் தற்போது கோட்டை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
தவெக அரசு அமைந்த பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்ட பேரவை நடவடிக்கைகள் எவ்விதத் தடையுமின்றி தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்புத் துறையின் யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் தங்களது தொகுதி எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளையும், மக்கள் பிரச்சினைகள் அவையில் எவ்வாறு விவாதிக்கப்படுகின்றன என்பதையும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் ஒளிபரப்பில் தாமதம் கொண்டுவருவது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற ஒரு வெளிப்படையான நடைமுறையைக் குறைத்துவிடுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.
அவை ஒழுங்கைப் பேணவும், தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ்களாகப் பரவுவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டாலும், நேரலையை முற்றிலும் நீர்த்துப்போகச் செய்யக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. எனவே, பேரவையின் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், அவைக்குறிப்பு நீக்கங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும் வகையில் விஜய் அரசு முறையான முடிவை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
