குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 18 முதல் 40 வயதுடைய எவரும் இத்திட்டத்தில் இணைந்து, 60 வயதிற்குப் பிறகு மாதம் 1,000 முதல் 5,000 ரூபாய் வரை நிலையான ஓய்வூதியத்தைப் பெற முடியும்.
உதாரணமாக, 25 வயதுடைய ஒரு நபர் மாதம் 376 ரூபாய் செலுத்தினால், முதுமையில் அவருக்கு 5,000 ரூபாய் பென்ஷன் கிடைப்பதுடன் சுமார் 8.5 லட்சம் ரூபாய் வரையிலான முதிர்வுத் தொகையும் சேரும். சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இது ஒரு சிறந்த சேமிப்புத் திட்டமாகும்.
மேலும், மிகக் குறைந்த கட்டணத்தில் ஆயுள் காப்பீடு வழங்க பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டமும் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு வெறும் 436 ரூபாய் பிரீமியம் செலுத்துவதன் மூலம், எதிர்பாராத மரணம் நிகழும் சூழலில் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். தினமும் மிகச்சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலம், முதுமை காலத்தைப் பொருளாதாரச் சிக்கலின்றி நிம்மதியாகக் கழிக்க முடியும்.
