பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான். பெங்களூரு அசோக் நகர் பகுதிக்கு உட்பட்ட பிரிகேட் ரோட்டில் புதிதாக கேளிக்கை விடுதி ( பப்) தொடங்கப்பட்ட நிலையில் அதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் பங்கேற்றார். அப்போது அவரைப் பார்க்க பிரிகேட் ரோட்டில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு காத்திருந்தனர். அவர்களில் இளம் பெண்களும் அதிகளவில் காணப்பட்டனர். அப்போது பப் முன்பாக திரண்டிருந்த தனது ரசிகர்களை பார்த்து ஆர்யன்கான் கைகளை அசைத்தார். அப்போது அவர் ஆபாசமாக சைகை காட்டியதாக கூறப்படுகிறது.
ஆர்யன்கான் அருகே அமைச்சர் ஜமீர் அகமதுகான், அவரது மகன், ஹாரிஸ் எம்எல்ஏவின் மகன் ஆகியோரும் அப்போது நின்றிருந்தனர். ஆர்யன்கான் ஆபாச சைகை காட்டியதை பார்த்து அவர்களும் அமைதியாக இருந்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து இதுவரை போலீஸ் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆர்யன்கான் நடிகர் ஷாருக்கானின் மகன் என்பதாலும் அவருடன் ஆளுங்கட்சி அமைச்சர், எம்எல்ஏக்களின் மகன்கள் இருந்ததாலும் இந்த விவகாரத்தை போலீசார் அலட்சியப்படுத்தி விட்டதாக ரசிகர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
