ஸ்டாலினின் சைலண்ட் ஸ்கெட்ச்…. 2026 தேர்தலுக்காக கரூர், திருச்சியில் அரங்கேறும் மெகா மாற்றம்…. சீனியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி….!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

வரவிருக்கும் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுக தனது கட்சி அமைப்பிலும் மாவட்ட நிர்வாகத்திலும் அதிரடியான மறுசீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. பெரிய கட்சி மாவட்டங்களைச் சிறிய பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு தொகுதிக்கும் நேரடிக் கண்காணிப்பை ஏற்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம். இருப்பினும், இந்த மாற்றங்கள் கரூர், திண்டுக்கல் மற்றும் திருச்சி போன்ற முக்கிய மாவட்டங்களின் மூத்த தலைவர்களின் அதிகாரப் பங்கீட்டில் சலசலப்புகளையும், புதிய அரசியல் சமன்பாடுகளையும் உருவாக்கியுள்ளன.

கரூரில் இதுவரை ஒரே மாவட்ட அமைப்பின் கீழ் இருந்த 4 சட்டமன்றத் தொகுதிகள், தற்போது கரூர் மேற்கு மற்றும் கரூர் கிழக்கு என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்படவுள்ளன. நீண்டகாலமாகக் கரூரைத் தனது அரசியல் தளமாகக் கொண்ட செந்தில் பாலாஜிக்கு அடுத்ததாக என்ன பொறுப்பு வழங்கப்படவுள்ளது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. அதேநேரத்தில், அவர் கரூரிலேயே தொடர்வாரா அல்லது கோவை மண்டலக் கட்சிப் பொறுப்புகளை கவனிப்பாரா என்ற விவாதங்களும் அறிவாலய வட்டாரத்தில் தீவிரமடைந்துள்ளன.

   

திண்டுக்கல் மாவட்டத்திலும் இதேபோன்ற கட்டமைப்பு மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. ஏற்கனவே ஒரே தலைமையின் கீழ் இருந்த 7 சட்டமன்றத் தொகுதிகள், தற்போது 3 புதிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது. பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும்; திண்டுக்கல், நத்தம் மற்றொரு மாவட்டமாகவும்; நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகியவை மூன்றாவது மாவட்டமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பல ஆண்டுகளா ஒரே தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்த தொகுதிகள் சிதறியிருப்பது உள்ளூர் நிர்வாகிகளிடையே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த மறுசீரமைப்பில் அதிக கவனத்தையும் சலசலப்பையும் ஈர்த்துள்ள இடம் திருச்சி மாவட்டமாகும். இங்குள்ள 9 தொகுதிகள் 4 கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்படவுள்ள நிலையில், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் செல்வாக்கு மண்டலங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அன்பில் மகேஷ் கவனித்து வந்த தொகுதிகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாகக் குறைய வாய்ப்புள்ள நிலையில், கே.என். நேருவின் மகன் அருண் நேருவுக்கு 3 தொகுதிகள் அடங்கிய மாவட்டப் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் கட்சிக்குள் கேள்விகளை எழுப்பியுள்ளன.

 

இருப்பினும், திமுக தலைமையும் ஸ்டாலினும் இந்த மறுசீரமைப்பு முடிவில் உறுதியாக உள்ளனர். சிறிய மாவட்டங்களாகப் பிரிப்பதன் மூலம் தேர்தல் களப்பணிகள், வாக்குச்சாவடி முகவர் நிர்வாகம் மற்றும் கூட்டணிக் கட்சி ஒருங்கிணைப்பு ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும் என்பது தலைமையின் கணக்கீடு. தற்காலிகமாகச் சில மூத்த தலைவர்களிடையே அதிருப்தி தென்பட்டாலும், தேர்தல் நேரத்தில் கட்சி இயந்திரத்தை முழு வீச்சில் இயக்கி வெற்றியை உறுதி செய்ய இந்த மாஸ்டர் பிளான் உதவும் என்பதே அறிவாலயத்தின் கணிப்பு.