தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டத்தில், அக்கட்சியின் நகர மகளிர் அணி அமைப்பாளர் அருள்ஜோதி பேசிய உணர்ச்சிப்பூர்வமான பேச்சு பெரும் வைரலாகி வருகிறது. மேடையில் பேசிய அவர், தான் உயிருடன் இருக்கும் போதே ஒருமுறையாவது விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்றும், ஒருவேளை தான் இறக்க நேரிட்டால் தனது உடலை எரிக்காமல் புதைக்க வேண்டும் என்றும், அந்தச் சமாதியில் விஜய்யின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
தனது குடும்பத்தினரை விடவும் தளபதி விஜய் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கையில் அவரது பெயரைப் பச்சை குத்தியிருப்பதாகக் கூறிய அருள்ஜோதி, தனது ரேஷன் கார்டிலும் விஜய் பெயரைச் சேர்க்க அதிகாரிகளிடம் சண்டையிட்டதாகக் கூறி அதிரவைத்தார். அங்கிருந்த தவெக நிர்வாகிகளிடம், “விஜய்யின் ஆதார் கார்டை வாங்கிக் கொடுத்தால் ரேஷன் கார்டில் அவர் பெயரைச் சேர்த்து விடுவேன்” என அவர் கேட்டது கூட்டத்தில் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
