மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் , தூக்கத்தின் போது தொண்டையில் செயற்கை பற்கள் சிக்கிய 56 வயது நபரின் உயிரை மருத்துவர்கள் மிகவும் சாமர்த்தியமாகப் போராடி காப்பாற்றியுள்ளனர். தமோ பகுதியைச் சேர்ந்த ராம்தாஸ் என்ற அந்த நபர், இரவில் தூங்குவதற்கு முன்பு தனது செயற்கை பற்களைக் கழற்ற மறந்துவிட்டார். நள்ளிரவில் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உடலில் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கியதால், பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவருக்கு ஆரம்பக்கட்ட சோதனையாக எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்கப்பட்டது. ஆனால், விசித்திரமாக எக்ஸ்-ரே அறிக்கையில் எந்த ஒரு பொருளும் தொண்டையில் இருப்பது போலக் காட்டவில்லை. ஏனெனில், அந்த நபர் பயன்படுத்திய செயற்கை பற்கள் பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்டவை என்பதால், அவை எக்ஸ்-ரே இயந்திரத்தில் பதிவாகவில்லை. இது மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது என்றாலும், நோயாளியின் அறிகுறிகள் மற்றும் குடும்பத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மருத்துவர்கள் அடுத்தகட்ட சிகிச்சையை விரைந்து தொடங்கினர்.
இறுதியாக, இஎன்டி துறையின் மருத்துவர்கள் ‘எசோபகோஸ்கோபி’ என்ற சிறப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மூச்சுக்குழாய் மற்றும் உணவுப்பாதையின் சந்திப்பில் சிக்கியிருந்த மூன்று செயற்கை பற்களை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். மயக்க மருந்து நிபுணர்களின் உதவியுடன் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது. செயற்கை பற்களைப் பயன்படுத்துபவர்கள் தூங்குவதற்கு முன்பு அவற்றை மறக்காமல் கழற்றி வைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இது போன்ற உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
