நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்த சுர்ஜித், தனது சகோதரியைக் காதலித்த கவின் என்ற வாலிபரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுர்ஜித்தின் சகோதரியுடனான காதலைக் கைவிட மறுத்த கவினை, தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இடைமறித்த சுர்ஜித், மிளகாய் பொடி தூவிச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதால், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ சரவணனின் மூன்று ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது முக்கியத் திருப்பமாகச் சுர்ஜித்தின் தாயாருக்கு நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வழக்கில் சம்மனுக்குப் பதிலளிக்காமலும், விசாரணைக்கு ஒத்துழைக்காமலும் அவர் இருந்த காரணத்தினால், அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், விரைவில் சுர்ஜித்தின் தாயார் கைது செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
