அமெரிக்காவின் ஷார்லட் நகரில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள பல்கலைக்கழக மாணவி ஒருவருடன் அலெக்சாண்டர் மைக்கேல் இவானாஃப் என்ற 19 வயது இளைஞர் உடலுறவில் ஈடுபட்டதை, தனது கைப்பேசியில் ரகசியமாகப் படம்பிடித்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை பெண்ணின் அனுமதியின்றி 32 உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ்அப் அல்லது அரட்டைக் குழுவில் பகிர்ந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, கடந்த திங்கட்கிழமை அன்று இவானாஃபைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் அனுமதியின்றி அந்தப் பாலியல் செயலை வேண்டுமென்றே பதிவுசெய்து குழுவில் அனுப்பியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, தனிப்பட்ட படங்களை வெளியிட்டது மற்றும் ரகசியமாகப் படம் பிடித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், கடந்த செவ்வாயன்று 10,000 டாலர் பிணைத்தொகையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட இவானாஃப் தற்போது பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் அல்ல என்று சார்லட்டில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். “இந்த வழக்கில் கூறப்படுவது உண்மையாக இருந்தால், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எங்கள் வளாக சமூக உறுப்பினர்களிடமிருந்து இதை நாங்கள் எக்காரணம் கொண்டும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று அவர் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து உயர் மட்டத்திலான தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறையினர் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
