சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த பயணி ஒருவர், திருச்சி மாவட்டம் துறையூருக்குச் செல்ல தான் முன்கூட்டியே பேருந்து முன்பதிவு செய்திருந்ததாகக் கூறினார். இரவு 10:30 மணிக்கு வரவேண்டிய பேருந்து, நள்ளிரவு 11:45 ஆகியும் வராதது குறித்தும், இதுபற்றி அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்தது குறித்தும் அமைச்சரிடம் அவர் நேரடியாகக் குற்றம்சாட்டினார். இதேபோல் பெரம்பலூர் செல்ல வேண்டிய மற்றொரு பயணியும் வாரக் கணக்கில் முன்பதிவு செய்தும் பேருந்து குறித்த முறையான அறிவிப்பு இல்லை எனத் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
மக்களின் இந்த நியாயமான புகாருக்குப் பதிலளித்த அமைச்சர் தமிழன் பார்த்திபன், “பேருந்து உள்ளே இருக்கும், போய் பாருங்கள்” என மழுப்பலாகக் கூறியதுடன், “நீ நன்றாகச் சாப்பிட்டிருக்கிறாய், நான் இன்னும் சாப்பிடக் கூட இல்லை” எனத் திரும்பத் திரும்பக் கூறியதாகத் தெரிகிறது. அமைச்சரின் இந்த விசித்திரமான பேச்சு அங்கிருந்த பயணிகளிடையே பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில் சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து இல்லாமல் தவிக்கும் மக்களின் பசியையும் வலியையும் உணராமல், ஓர் அமைச்சரே பொதுவெளியில் தனது பசியைப் பற்றிப் பேசியது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மறுபுறம், அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்தப் பயணி மது அருந்தியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனை மறைமுகமாகக் சுட்டிக்காட்டும் விதமாகவே, “நீங்க நல்லா சாப்பிட்டு இருக்கீங்க” என்று அமைச்சர் தமிழன் பார்த்திபன் குறிப்பிட்டதாகப் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எனினும், பேருந்து தாமதம் குறித்த முக்கியப் புகாரைத் திசைதிருப்பி மழுப்புவதற்காகவே அமைச்சர் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகச் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதங்கள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வருகிறார்களா? அல்லது தங்களின் தனிப்பட்ட விமர்சனங்களை பொதுவெளியில் கொட்டி பயணிகளை அவமதிக்க வருகிறார்களா? என்ற பலத்த கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கேள்விகளால் துளைத்தெடுத்த இந்த நள்ளிரவுச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அமைச்சருக்கு எதிரான கண்டனக் கணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
