சி.ஜே.பி ஆர்ப்பாட்டக் களம் ஒன்றில் பெண் ஒருவர் தமக்குத் தேவையான அச்சிடப்பட்ட போராட்டப் போஸ்டர்களை ‘பிளிங்கிட்’ ஆன்லைன் சேவை மூலம் நேரடியாகப் பெற்றுக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஞ்சன் என்ற எக்ஸ் தளப் பயனர் பகிர்ந்த இந்த வீடியோ, தொழில்நுட்பம் மற்றும் விரைவு வணிக சேவைகள் எவ்வாறு அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளின் ஒரு பகுதியாக மாறிவருகின்றன என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித முன்கூட்டிய தயாரிப்புமின்றி, சில நிமிடங்களிலேயே போஸ்டர்கள் கைக்குக் கிடைத்த இந்த முறையை சிலர் “புதிய காலத்துப் போராட்டம்” என்று வியந்து பாராட்டினாலும், இந்நிறுவனத்தின் நடுநிலை குறித்து மற்றவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், பிளிங்கிட் நிறுவனம் அரசியல் உள்ளடக்கங்களை ஆதரிக்கவில்லை மாறாக, வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சாதாரண காகித அச்சிடுதல் மற்றும் டெலிவரி சேவைகளை மட்டுமே வழங்குகிறது என்று பல பயனர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்போதைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் முறைகளும் எவ்வாறு எளிதாகி வருகின்றன என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, இணையவாதிகள் மத்தியில் ஆதரவு மற்றும் விமரிசனங்களைச் சந்தித்து விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
