அரை நூற்றாண்டுகால திமுக, அதிமுக ஆட்சிகளுக்குப் பிறகு, தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முதலமைச்சர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நிதியமைச்சர் மரிய வில்சன் தயாரித்துள்ள இந்த 2026-27-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் ‘அறம், பொருள், இன்பம்’ என்ற முப்பால் தத்துவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது. மாநிலத்தின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, வீண் விரயங்களைத் தவிர்த்து அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த தொலைநோக்குத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வரவு செலவுத் திட்டத்தில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறவுள்ளன. குறிப்பாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் புதிய வீடுகள் கட்டும் திட்டம், முதியோர் உதவித்தொகை உயர்வு, பாரம்பரிய விளையாட்டுகளுக்கான தனி நிதி ஒதுக்கீடு மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு அருங்காட்சியகம் அமைத்தல் போன்ற அம்சங்கள் இதில் முதன்மை பெறுகின்றன. மேலும், காமராஜர் பெயரில் சிறப்புப் பள்ளிகள் தொடங்குவதோடு, அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் தரம் உயர்த்தும் முக்கிய முடிவுகளும், பட்டா வழங்கும் முறையை முறைப்படுத்தும் அறிவிப்புகளும் இதில் வெளியாகவுள்ளன.
முக்கியமாக, தேர்தல் வாக்குறுதிகளில் தவெக அளித்த உறுதியின்படி, பெண் சமுதாயத்தின் பாதுகாப்பிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களின் தொழில்முனைவை ஊக்குவிக்க ‘பெண்கள் தன்னிறைவு சிறப்புத் தொழிற்பேட்டைகள்’ அமைக்கப்பட உள்ளதோடு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்து தண்டனை வழங்க சிறப்பு நீதிமன்றங்களும் தொடங்கப்பட உள்ளன. மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் ஒரு மைல்கல்லாக இந்த முதல் பட்ஜெட் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
