தமிழ்நாட்டில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்டங்களை தங்குதடையின்றி பெறுவதற்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை அவசியமாகும். 2026 ஜனவரி 1 முதல், இந்த அட்டை தேவைப்படுபவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது https://swavlambancard.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக மார்பளவு புகைப்படம், ஆதார் மற்றும் குடும்ப அட்டையின் அசல் ஆவணங்களைச் சமர்ப்பித்து இணையதளத்தில் ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பித்த பிறகு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரும்போது, உரிய ஆவணங்களுடன் மருத்துவக் குழுவின் முன் ஆஜராக வேண்டும். கை, கால் பாதிப்பு, பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு முதல் கற்றல் குறைபாடு மற்றும் நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு வரை 21 வகையான குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த அட்டைக்குத் தகுதியானவர்கள். மருத்துவக் குழுவின் பரிசோதனை முடிவில் தகுதியின் அடிப்படையில் இந்த அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் குறைதீர்ப்பு முகாம்களிலும் இதற்கான மனுக்களை அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
