தமிழகம் முழுவதும் இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் உட்பட அரசின் பல்வேறு சேவைகளையும் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழக முழுவதும் ஜூலை 15 இன்று தொடங்கி வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி வரை இந்த முகாம்கள் நடைபெற உள்ளது. ஊரகப்பகுதிகளில் இந்த முகாம்கள் மூலமாக 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளது.
மொத்தம் நான்கு கட்டங்களாக பத்தாயிரம் முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் அரசு சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்குச் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அனைத்து துறை அதிகாரிகளுமே இந்த முகாம்களில் இருப்பார்கள் என்பதால் பெரும்பாலான சேவைகளை மக்கள் இதில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காமராஜர் பிறந்த நாளில் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க நாளாக இந்த நாள் அமைந்துள்ளது என்று ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு வழங்கப்படும் என்றும் இந்த முகாம்களில் மனு அளிப்பவர்களுக்கு நிச்சயமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
