“மெத்தைக்கு அடியில இவ்ளோ லட்சங்களா?”.. அரசு அதிகாரி வீட்டைப் பார்த்து மிரண்டு போன லஞ்ச ஒழிப்புத்துறை.. சினிமா பாணியில் பதுக்கப்பட்ட லஞ்சப் பணம்..!!

By Muthu Mani on ஆனி 17, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நிலம் மற்றும் சர்வே துறையின் இணை இயக்குநரான எஸ். நரஹரி, வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த புகாரின் அடிப்படையில், நேற்று அவரது சொகுசு இல்லம், அரசு அலுவலகம், மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் என மொத்தம் 11 முக்கிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது, அதிகாரி நரஹரியின் படுக்கையறையில் இருந்த மெத்தைக்கு அடியில் மட்டும் சுமார் ரூ.32 லட்சம் ரொக்கப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சினிமா பாணி லஞ்ச ஒழிப்பு ரெய்டு சம்பவம் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமன்றி, அங்கிருந்த பீரோவின் மேல் பகுதியிலும் கட்டுக்கட்டாகப் பணம் சிதறிக்கிடந்தது அதிகாரிகளை அதிர வைத்தது. வீட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் ரூ.1.54 கோடி ரொக்கப் பணம் மற்றும் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பிக்சட் டெபாசிட் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரொக்கப் பணம் தவிர, பல லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடுகள், விளைநிலங்களின் அசல் பத்திரங்களும் அதிகாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரில் சிக்கிய நரஹரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், அவருக்குச் சொந்தமான இரண்டு முக்கிய வங்கி லாக்கர்களைத் திறந்து சோதனை செய்ய நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இச்சம்பவம் தெலங்கானா அரசு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.