மெக்ஸிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் சுற்றுலாப் பயணி ஒருவர் கடல் அலைகளுக்கு இடையே உயிருக்குப் போராடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அழகிய கடற்கரையை ரசிப்பதற்காகச் சென்ற அந்த நபர், எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஆபத்தான அலைகளின் பிடியில் சிக்கிக் கொண்டார். அவர் கரையை நோக்கி வர எத்தனித்த போதிலும், சீறிப்பாய்ந்து வந்த அலைகள் அவரை மீண்டும் மீண்டும் கடலுக்குள்ளேயே இழுத்துச் சென்றன.
இந்த விபத்துக்கு கடலில் ஏற்படும் ‘ரிப் கரண்ட்’ எனப்படும் ஆபத்தான கடல் நீரோட்டமே காரணம் என்று கூறப்படுகிறது. அலைகள் வேகமாக கரையை நோக்கி வந்துவிட்டு, குறுகிய இடைவெளி வழியாக மீண்டும் கடலுக்குள் திரும்பும்போது இந்த தீவிரமான நீரோட்டம் உருவாகிறது. இது எவ்வளவு சிறந்த நீச்சல் வீரராக இருந்தாலும், கண் இமைக்கும் நேரத்திற்குள் அவர்களைக் கடலின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லும் அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்தது.
https://www.instagram.com/reel/DWPjMNVk8R2/?utm_source=ig_web_button_share_sheet
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த நபரை, அங்கு பணியில் இருந்த லைஃப்கார்ட் சரியான நேரத்தில் கவனித்து சாதுரியமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டார். கிறிஸ்டின் என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், காபோ கடற்கரையின் அலைகள் மிகவும் ஆபத்தானவை என்றும், லைஃப்கார்ட் சரியான நேரத்தில் வராமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும் என்றும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
