தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதை அடுத்து, அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்திய புகாரில் 3 சார் பதிவாளர்கள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சார் பதிவாளர்கள் மீது வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமரகுருபரன் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனத் துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
