சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனரான அண்ணாமலை, தமிழகத்தில் ஆளும் தவெக அரசின் சில அமைச்சர்கள் டெண்டர்களில் 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை லஞ்சம் மற்றும் கமிஷன் கேட்பதாக பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முதல்வர் விஜய் ஊழலுக்கு எதிரானவராக இருந்தாலும், “நாங்கள் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வந்துள்ளோம், அதனால் கமிஷன் கொடுங்கள்” என்று சில அமைச்சர்கள் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஆதாரங்கள் தன்வசம் இருப்பதாக அண்ணாமலை பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உரையின் தீவிரத்தை உணர்ந்த மாநில உளவுத்துறை, அண்ணாமலை பேசிய பேச்சுக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் முழு அறிக்கையையும் உடனடியா சேகரித்து முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு அனுப்பி வைத்தது. உளவுத்துறையின் அறிக்கையைப் பார்த்த முதல்வர் விஜய், தனது முதன்மை ஆலோசகர்கள் மற்றும் செயலாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அரசில் தவறுகள் எதுவும் நடைபெறவில்லை என ஆலோசகர்கள் முதற்கட்டமாகத் தெரிவித்த போதிலும், துறை ரீதியான ஆய்வுகள் மூலம் உண்மை நிலவரத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆலோசனையின் போது, எந்தெந்த அமைச்சர்களுக்கு எதிராக அண்ணாமலையிடம் ஆதாரங்கள் இருக்கக்கூடும் என்பதைத் துல்லியமாகக் கண்டறியுமாறு முதல்வர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையிடம் உள்ள ஆடியோ ஆதாரங்கள் யாருடையது, எந்தத் துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இதில் தொடர்புள்ளது என்பது குறித்து முழுமையாகத் துப்பறிந்து விரிவான அறிக்கை அளிக்குமாறு உளவுத்துறைக்கு முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்ற வாக்குறுதியோடு ஆட்சியைப் பிடித்த தவெக அரசுக்கு, இந்த லஞ்சப் புகார் மிகப்பெரிய தார்மீகச் சவாலாக உருவெடுத்துள்ளது. அண்ணாமலையிடம் உண்மையிலேயே வலுவான ஆடியோ ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், அது ஆளும் தரப்பிற்குப் பெரும் நெருக்கடியை உண்டாக்கும் என்பதால், இந்த விவகாரம் தவெக உட்கட்சி வட்டாரத்தில் பெரும் புகைச்சலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
