தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்தும் பேசி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக போட்டி என்ற காலம் போய் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே தமிழக பாஜக தலைமை மாறியதும் கோவில்களில் தியானம் செய்தார் அண்ணாமலை. கட்சியின் தேசிய பொறுப்பு அவருக்கு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் மாநில நிகழ்வுகளில் கூட தலை காட்டாமல் இருந்தார். இதனை தொடர்ந்து டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை சமாதானம் செய்யும் டாஸ்கில் உள்ள அவர், தன்னுடைய பாணியில் திமுகவை பேட்டியில் விலாச தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மைக்காலமாக கட்சியிலிருந்து சற்று ஒதுங்கி இருக்கும் அண்ணாமலை, தனது அரசியல் நகர்வுகள் குறித்து ரஜினியிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. பாஜகவில் தனக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக ரஜினியிடம் அவர் கூறியுள்ளாராம். இதனை டெல்லி தலைமைக்கு கூறுமாறு அண்ணாமலை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
