தமிழ்நாட்டு அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, அண்மையில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக). இந்த அதிரடி மாற்றத்தால் திராவிடக் கட்சிகளின் முக்கியப் புள்ளிகள் பலரும் தவெக நோக்கி படையெடுத்து வரும் வேளையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கட்சியில் இணைவோரின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளது. தவெகவின் இந்த எழுச்சி மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது; குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து சுமார் 18 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த பாஜக, தற்போதைய சட்டசபைத் தேர்தலில் வெறும் 2.97 சதவீத வாக்குகளாகச் சரிந்து பலத்த அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது.
இந்த வாக்குச் சரிவைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் அடிமட்டக் கட்டமைப்பு முதல் தலைமை வரை அதிரடி மாற்றங்களைச் செய்ய டெல்லி மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. விஜய்யின் இளமை மற்றும் மாற்றத்திற்கான அரசியலுக்குப் போட்டியாக மற்றொரு இளம் தலைவரைக் களம் இறக்க வேண்டும் என்பதே டெல்லியின் தற்போதைய திட்டமாக இருக்கிறது. இதற்குப் பொருத்தமானவராக கே. அண்ணாமலையின் பெயர் அடிபட்டாலும், அவர் கட்சியின் தேசியக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு ஒரு மாற்றுத் திட்டத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் தவெக கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது போல, இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவைப் பெற்றுள்ள அண்ணாமலையும் தனிக்கட்சி தொடங்கினால் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அவரது ஆதரவாளர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மூலம் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தனக்கென ஒரு தனி வாக்கு வங்கியை அண்ணாமலை உருவாக்கியுள்ளார். தற்போது அதிமுகவுக்குள் கொங்கு மண்டல லாபி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரும்பி இருக்கும் சூழலில், கொங்கு பகுதியில் பலமிக்க அண்ணாமலை புதிய கட்சி தொடங்கினால் அது அவருக்குப் பெரும் சாதகமாக அமையும் என்று கணிக்கப்படுகிறது. நான் என்றும் தேசியத் தலைமையின் உத்தரவை ஏற்கும் அடிமட்டத் தொண்டனாகவே நீடிப்பேன் என்று அண்ணாமலை தரப்பு இந்த யூகங்களை அதிகாரப்பூர்வமாக மறுத்திருந்தாலும், தமிழக பாஜகவுக்குள் இருக்கும் ‘அண்ணாமலை ஆதரவாளர்கள் எதிர் சீனியர் தலைவர்கள்’ இடையேயான முட்டல் மோதல்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
முன்பு நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவிருந்த கட்சியில் இணையவிருந்த அண்ணாமலை, தற்போது தனிக்கட்சி தொடங்கினாலும் அதற்கு பாஜக தலைமை முட்டுக்கட்டை போடாது என்றே தற்போதைய அரசியல் சூழல் உணர்த்துகிறது. அண்ணாமலை புதிய பிராந்தியக் கட்சி ஒன்றைத் தொடங்கி, பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன. இதன் மூலமாக, டெல்லித் தலைமையின் நேரடிப் பிடி என்ற விமர்சனத்தைத் தவிர்த்து, ‘பாஜகவின் கொள்கைகளைப் பேசும் தீவிரமான மாநிலக் கட்சி’ என்ற புதிய அடையாளத்தை அண்ணாமலையின் கட்சி பெறும் என்றும், இது தமிழக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் எதிர்கால அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்களால் உற்றுநோக்கப்படுகிறது.
தமிழகத்தில் 'வி தி லீடர்ஸ்' என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி தீவிரப் பணியாற்றி வரும் அண்ணாமலை, அதனை விரைவில் முழுமையான…
பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் பொறுப்பில் இருந்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 6…
சேலம் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை…
விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கான தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி,…
பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தொடர்ந்து புதிய நியமனங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச்…
பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…