விஜய் பாணியை கையில் எடுத்த அண்ணாமலை… திமுக, அதிமுக-வை அலறவிடும் 22,000 ‘இளம் படை’…. உள்ளாட்சித் தேர்தலில் வெடிக்கப்போகும் அணுகுண்டு.!

By Nanthini on ஆனி 10, 2026

Spread the love

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலை என்ற பெயர் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய அவர், ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) என்ற புதிய அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் ‘இது நம்ம இயக்கம்’ என்ற புதிய அரசியல் பயணத்தை கடந்த ஜூன் 5-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அரசியலில் புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, கோவையில் நவீன அரசியல் பயிற்சி மையம் ஒன்று தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மையத்தின் மூலம் அரசியல், நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி பெறும் சாதாரண இளைஞர்களை, நேரடியாகத் தேர்தல் களத்தில் நிறுத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

பாரம்பரிய அரசியல் குடும்ப பின்னணி மற்றும் உள்ளூர் செல்வாக்கு உள்ளவர்களை மட்டுமே நம்பியிருக்கும் தற்போதைய அரசியல் சூழலை மாற்றி, சாதாரண எளிய இளைஞர்களை அரசியலுக்குள் கொண்டு வருவதே இந்த இயக்கத்தின் முக்கிய வியூகமாகக் கருதப்படுகிறது. அண்ணாமலை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இயக்கம் தொடங்கப்பட்ட வெறும் ஐந்து நாட்களிலேயே சுமார் 17 லட்சம் பேர் இதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இணைந்தவர்களில் 25.2 சதவீதம் பேர் ‘ஜென்-ஸீ’ (Gen Z) எனப்படும் 1997-க்குப் பிறகு பிறந்த இளம் தலைமுறையினர் ஆவர்.

   

மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக இந்த இயக்கத்தைச் சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில் 37.7 சதவீதம் பேர் இளைஞர்கள் என்பதால், சுமார் 22,760 இளம் வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தல் களத்தில் இறக்க அண்ணாமலை வியூகம் வகுத்து வருகிறார். தமிழகத்தில் அண்மையில் இளைஞர்களையும், முதல்முறை வாக்காளர்களையும் மையப்படுத்தி மிகப்பெரிய அரசியல் வெற்றியைப் பெற்ற தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் உத்தியையே, தற்போதும் அண்ணாமலையும் கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சமூக ஊடகப் பயன்பாடு, அரசியல் பயிற்சி முகாம்கள் என விஜய்யின் பாணியை நினைவூட்டும் வகையில் அண்ணாமலையின் நகர்வுகள் அமைந்துள்ளன.

   

ஆயிரக்கணக்கான வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உள்ளாட்சித் தேர்தலில், பெரிய கட்சிகள் வழக்கமாக அனுபவம் வாய்ந்த நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கும். ஆனால், அதற்கு நேர்மாறாக முற்றிலும் புதிய முகங்களையும், இளைஞர்களையும் ஒரே நேரத்தில் களம் காண வைக்கும் அண்ணாமலையின் இந்த அதிரடி முயற்சி தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான வித்தாகப் பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி உடனடியாக ஆட்சிக் கட்டிலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இளைஞர்களைப் பெருமளவில் ஈர்க்கும் இத்திட்டம் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற முன்னணி கட்சிகளுக்குச் சற்றே அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.