மத்தியப் பிரதேச மாநிலம் மைஹர் மாவட்டம் அமர்பட்டான் காவல் எல்லைக்குட்பட்ட கிராஹை பந்தா கிராமத்தில், பதிராம் கோல் என்பவர் சனிக்கிழமை இரவு கோடரியால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் அதிரடியாகத் தீர்த்து வைத்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலைச் சம்பவத்தில் தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், மூன்று சிறார்கள் உட்பட ஆறு குற்றவாளிகளைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலைக்குக் காதல் விவகாரமும், சூனியம் குறித்த சந்தேகமுமே முக்கியக் காரணங்களாக இருந்திருப்பது போலீஸ் விசாரணையில் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொலைக்கான பின்னணி குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கைதான முக்கியக் குற்றவாளிக்கும் பதிராம் கோலின் மூத்த மகளுக்கும் இடையே காதல் உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த பதிராம், தன் மகளுக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த காதலன், தங்களது காதலுக்குப் பதிராம்தான் முட்டுக்கட்டையாக இருந்ததாகக் கருதி அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளான். இதற்கிடையில், இறந்த பதிராமின் மூத்த சகோதரருக்கும் பதிராம் மீது கடுமையான பகை இருந்துள்ளது. பதிராம் தனக்கு எதிராகச் சூனியம் வைப்பதாகவும், தனது முன்னேற்றத்திற்கு அவரே தடையாக இருப்பதாகவும் அந்த மூத்த சகோதரர் நம்பியுள்ளார். இந்த இருவேறு பகையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட குற்றவாளிகள், பதிராமைத் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று இரவு குற்றவாளிகள் தங்கள் கூட்டாளிகளுடன் பதிராமின் வீட்டிற்கு வெளியே வந்து சண்டையிடத் தொடங்கியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த பதிராமிடம், அங்கு வந்த அவரது மூத்த சகோதரரும் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே, திட்டமிட்டபடி குற்றவாளிகள் பதிராமை கோடரியால் கொடூரமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விவரித்த துணை காவல் கண்காணிப்பாளர் (SDOP) க்யாதி மிஸ்ரா, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கைதான மூன்று சிறார்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்ற குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பதிராமின் மூத்த சகோதரரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
