கோவையில் நடைபெற்ற ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் அப்துல் கலாம் அறம் மற்றும் அரசியல் பயிற்சி மைய தொடக்க விழாவில் அதன் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். எளிய பின்னணியைக் கொண்டு அரசியலில் மாற்றத்தை உருவாக்க இந்த அமைப்பு களமிறங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவித்தார். மேலும், அடிப்படை மற்றும் கூடுதல் தலைமைப் பண்புகளை இளைஞர்களுக்கு வழங்குவதே இப்பயிற்சி மையத்தின் முக்கிய நோக்கம் என்றார்.
நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அண்ணாமலை, மறைமுகமாக முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். கண்ணாடி மாளிகைக்குள் இருந்துகொண்டு கார் கண்ணாடியைக் கீழே இறக்கி கை காண்பிப்பது மட்டுமே தலைவருக்கான அடையாளம் அல்ல என்று சாடிய அவர், பத்திரிகையாளர் சந்திப்பைக்கூட நடத்தாமல் எவ்வாறு ஒருவரால் தலைவராகச் செயல்பட முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், தினமும் மக்களைச் சந்தித்தால் தலைவரின் செல்வாக்கு (இமேஜ்) குறைந்துவிடும் என்ற எண்ணத்துடன், வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறை மட்டும் மக்களைச் சந்தித்து பேசுவதே தற்கால அரசியல் போக்கு மாறியிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழக அரசின் மின்சாரக் கொள்கை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்துப் பேசினார். காற்றாலை மின் உற்பத்தியில் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, ரூ.35 கொடுத்து மின்சாரம் விலைக்கு வாங்குவதன் பின்னணி என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும், கோவைக்கு நூலகத்தைத் திறக்க வருகை தரும் முதல்வர் விஜய், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாத வகையில் எளிய முறையில் பாதுகாப்புடன் வந்து செல்ல வேண்டும் என்றும், வீதிகளைத் தடுப்புகள் அமைத்து முடக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
டெல்லியில் இளைஞர்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் அவர்கள் நடத்தும் போராட்டங்கள் முற்றிலும் நியாயமானவை என்றும், இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார். யாருக்கும் போட்டியாகத் தாங்கள் வரவில்லை என்றும், மாறாக அரசியலில் ஆரோக்கியமான மற்றும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
