ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் குறித்து பாஜகவினர் விமர்சிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, வெளிநாடு செல்வது ராகுல் காந்தியின் உரிமை என்றும், அவரது தனிப்பட்ட பயணத்தை விமர்சிப்பது தேவையற்றது என்றும் தெரிவித்தார். ராகுல் காந்தி பாஜக மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் பதிலளித்தால் போதுமானது என்று கூறிய அவர், SIR தொடர்பான புகார்கள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், தமிழகத்தில் 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், கற்றல் திறன் பாதிப்படைந்து வருவதாகவும் கவலை தெரிவித்தார். மாணவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்க விரும்பும்போது அதற்குத் தடைகள் விதிக்கக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்துடன் பிற வெளிநாட்டு மற்றும் இந்திய மொழிகளையும் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தினார்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திய அண்ணாமலை, படிப்பிற்காக கூகுள் போன்ற தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றார். மேலும், தமிழகத்தில் உள்ளாட்சிப் பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏரிகளைத் தூர்வாரும் பணிகள் போதுமானதாக இல்லை என்றும், அரசு அதிகாரிகளை நியமித்து உடனடியாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
