அதிமுகவில் இருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலவீனமடைந்து வரும் கட்சியை மீட்டெடுத்து வலுப்படுத்த வேண்டும் என்றால், ‘வி தி லீடர்ஸ்’ என்ற அமைப்பின் மூலம் தீவிரமாக இயங்கி வரும் அண்ணாமலையை அதிமுகவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று சில மாவட்ட செயலாளர்கள் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அண்ணாமலையின் ஆளுமையும், இளைஞர்களிடம் அவருக்கிருக்கும் செல்வாக்கும் அதிமுகவின் தற்போதைய தொய்வு நிலையை மாற்றி, அதற்கு புதிய ரத்தம்பாய்ச்ச உதவும் என அவர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும், இந்த அழைப்பை அண்ணாமலை ஏற்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என்றே தோன்றுகிறது. ஏனெனில், அவர் தனது சொந்த அரசியல் எதிர்காலத்தையும், ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பை ஒரு வலுவான புதிய அரசியல் கட்சியாக மாற்றுவதையும் இலக்காகக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அரசியல் சக்தியை உருவாக்க வேண்டும் என்ற கொள்கை முடிவில் இருக்கும் அண்ணாமலை, உட்கட்சிப் பூசல்களும் சரிவுகளும் நிறைந்த அதிமுகவின் தலைமைப் பொறுப்பையோ அல்லது அதன் ஒரு பகுதியாக மாறுவதையோ ஏற்பார் என்பது சந்தேகமே. ஒருவேளை கூட்டணி என்று வந்தால் மட்டுமே அவர் பரிசீலிக்க வாய்ப்புள்ளது.
