தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலையின் அண்மைக்கால நகர்வுகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. பாஜகவிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகி, “வி தி லீடர்ஸ்” (இது நம்ம இயக்கம்) என்ற புதிய அமைப்பைத் தொடங்கிய அவர், அதன் முதல் மாநில மாநாட்டை பொள்ளாச்சி அருகே பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளார். வழமையான அரசியல் மாநாடுகள் போல எதிர்த்தரப்பை வசைபாடாமல், “போதையில்லா தமிழகம் – விழிப்புணர்வு மாநாடு” என்ற பெயரில் சமூகப் பிரச்சாரமாக இதனை முன்னெடுத்ததன் மூலம், தமிழக அரசியலில் தனக்கென ஒரு தனித்துவமான பாணியை அண்ணாமலை உருவாக்கத் தொடங்கியுள்ளார் எனலாம்.
கரூரில் பிறந்து, கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி, பின்னர் தமிழக பாஜக தலைவராக குறுகிய காலத்தில் பிரபலமான அண்ணாமலையின் அரசியல் பயணம் அதிரடிகள் நிறைந்தது. கடந்த 2024 மக்களவைத் தேர்தல் தோல்வி மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஏற்பட்ட கூட்டணி முரண்பாடுகள் காரணமாக அவர் கட்சியை விட்டு வெளியேற நேரிட்டது. எனினும், கடந்த ஜூன் 5-ஆம் தேதி அவர் தொடங்கிய “வி தி லீடர்ஸ்” அமைப்பில் குறுகிய நாட்களிலேயே சுமார் 20 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். பா.ஜ.கவின் முன்னாள் நிர்வாகிகள் பலரும் இவருடன் கைகோர்த்து வருவது அண்ணாமலைக்கு அடிமட்ட அளவில் இருக்கும் செல்வாக்கைக் காட்டுகிறது.
50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்த பிறகே அரசியல் கட்சியை அறிவிப்பேன் என்று கூறியிருந்த அண்ணாமலை, அதற்கு முன்பாகவே இந்த மாநாட்டை நடத்தியுள்ளார். இந்த மாநாடு முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைத் தவிர்த்து, மக்களின் நலனை மையமாகக் கொண்டதாக அமைந்திருந்தது. தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசைப் பற்றிப் பேசும்போது கூட, புதிய அமைச்சர்கள் என்பதால் ஆரம்பத்தில் தடுமாறுவது இயல்புதான் என்றும், அவர்களைக் குறை கூறுவதை விட நல்ல ஆலோசனைகளை வழங்குவதே ஆரோக்கியமான ஜனநாயகம் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். எனினும், பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு அருகே விதிமுறைகளை மீறிச் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதில் தனது அழுத்தமான பதிவை அவர் முன்வைத்தார்.
அதேவேளையில், தான் முன்பு இருந்த பாஜக குறித்தோ அல்லது பிரதமர் மோடி குறித்தோ எந்தவொரு எதிர்மறை விமர்சனத்தையும் அண்ணாமலை முன்வைக்கவில்லை. தங்களது இயக்கத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளதால், ஒரு கட்சியை விட்டு வெளியேறும்போது அதை இழிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற முதிர்ச்சியான விளக்கத்தை அளித்தார். “இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன்; அதே நேரத்தில் தமிழகம் முன்னணி மாநிலமாக உயர வேண்டும்” என்று கூறிய அவர், மதம் மற்றும் ஜாதிக்குத் தங்களது இயக்கத்தில் இடமில்லை என்றும், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தனது கொள்கையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களுக்குப் போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ள அண்ணாமலை, சாதாரண இளைஞர்களைத் தலைவர்களாக உருவாக்கக் கோவையில் ‘ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அரசியல் பயிற்சி மையம்’ தொடங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி தங்களது இயக்கம் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இந்தப் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் தனது முதல் மாநாட்டிலேயே அரசியல் எதிரிகளைத் துணிச்சலாக அறிவித்த நிலையில், அண்ணாமலை யாரையும் தாக்காமல் “அரவணைப்பு அரசியல்” மற்றும் “பயிற்சி சார்ந்த அரசியல்” என்ற பிம்பத்தை முன்னிறுத்துகிறார். 2031-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்டு பயணிக்கும் அண்ணாமலையின் இந்த மாற்று அரசியல் அணுகுமுறை, தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு புதிய அத்தியாயம் ஆகும்.
