தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், குழந்தைகளைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் வரும் மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக 15 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு மாதம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடுமுறை காலத்திலும், அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யத் தேவையான வழிமுறைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கோடைக்கால வெப்ப அலைகளின் தீவிரத்தில் இருந்து பச்சிளம் குழந்தைகளையும், சிறுவர்களையும் காக்க இந்த நீண்ட விடுமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
