“அவங்க செஞ்சா தப்பு இல்லையா?…” 70 வயது மூதாட்டி விவகாரத்தை கையில் எடுத்த அமைச்சர்… அலறிய தி.மு.க… அனல் பறக்கும் தமிழக அரசியல்…!

By Visaka on ஆடி 20, 2026

Spread the love

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், திமுக ஆட்சிக்கால நடவடிக்கைகளையும் தற்போதைய கைது நடவடிக்கையையும் ஒப்பிட்டுப் பேசி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) கைது செய்யப்பட்டது சட்டப்படியே நடந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், கடந்த திமுக ஆட்சியில் அன்றைய முதலமைச்சருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதற்காக 70 வயது மூதாட்டியைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்ட கொடுமை அரங்கேறியது என்று சுட்டிக்காட்டினார். மேலும், திமுக ஆட்சியில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரை எதிர்த்து சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்ட பலரின் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

விளாத்திகுளம் எம்.எல்.ஏ-வின் கைது குறித்துப் பேசிய அமைச்சர், ஒரு பொது மேடையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் முதலமைச்சரை அச்சுறுத்தும் வகையிலும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசுவது சாதாரண விஷயமல்ல என்று திட்டவட்டமாகக் கூறினார். சாதாரண மூன்றாவது மனிதர் சாலையில் பேசுவதைக் கடந்து போகலாம், ஆனால் ஒரு மக்கள் பிரதிநிதி மைக்கைப் பிடித்து பொதுவெளியில் அவதூறாகப் பேசும்போது அது சட்டம் ஒழுங்கு பிரச்னையாக உருவெடுக்கும் என்று எச்சரித்தார். இதன் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவாகும் என்பதால், காவல்துறை சட்டப்படியே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும், இதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

   

அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் விலகி வருவது மற்றும் குதிரை பேரம் குறித்த புகார்களுக்குப் பதிலளித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், எதிர்க்கட்சியினர் தற்போது அரசியல் நாடகமாடி வருவதாகக் குற்றம் சாட்டினார். தங்களின் சட்டமன்ற உறுப்பினரிடம் அதிமுக தரப்பில் பேரம் பேசப்பட்டுப் பணம் பிடிபட்டுள்ளதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரங்கள் உள்ளதால் பேசியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் தங்களாக விரும்பித்தான் தங்களது பக்கம் வருகிறார்களே தவிர, இதில் எந்தக் குதிரை பேரமும் இல்லை என்று மறுத்த அமைச்சர், தங்களது எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசியதுதான் உண்மையான குதிரை பேரம் என்று தன் பேட்டியில் காரசாரமாகத் தெரிவித்தார்.