பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸுக்கு 87 வயதாகிவிட்டதால், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவரால் கட்சியின் நிர்வாக ரீதியான முடிவுகளைச் சரியாக எடுக்க முடியவில்லை என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சில கும்பல், ராமதாஸைத் தவறாக வழிநடத்தி கட்சிக்கு எதிராகச் செயல்பட வைப்பதாகவும், நிறுவனர் என்ற முறையில் அவர் கட்சிக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும் என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராமதாஸ் தன்னைத்தானே கட்சியின் தலைவராக அறிவித்துக்கொண்டது சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும், கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அன்புமணி வாதிட்டுள்ளார். கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி மீதான உரிமை தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார். இந்த அதிரடி மனு குறித்து மார்ச் 11-ஆம் தேதிக்குள் ராமதாஸ் பதிலளிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
