வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகத்தில், பள்ளியின் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட அலுவலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். காட்பாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றின் உரிமத்தைப் புதுப்பிக்க கடந்த ஆண்டு விண்ணப்பித்தும் தாமதமான நிலையில், செந்தில்குமார் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பள்ளி தாளாளர் தேவராஜ்லு அளித்த புகாரின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.25,000 பணத்தை வாங்கியபோது மறைந்திருந்த போலீசார் செந்தில்குமாரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
இந்த லஞ்ச விவகாரம் ஒரு தனிப்பட்ட ஊழலாக மட்டும் பார்க்கப்படாமல், கல்வித் துறையின் மீதான கறையாகவும் பெற்றோர்கள் மீதான மறைமுகச் சுமையாகவும் பார்க்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் தங்கள் உரிமத்தைப் புதுப்பிக்க இதுபோன்ற பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, அந்தச் செலவை ஈடுகட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்துகின்றன. இதன் விளைவாக, அரசு ஊழியர்களின் ஊழல் சாதாரண நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் பொருளாதாரத்தையே நேரடியாகப் பாதிக்கிறது. பள்ளிக் கட்டண உயர்விற்குப் பின்னால் இத்தகைய நிர்வாக ரீதியான ஊழல்களும் ஒரு முக்கியக் காரணியாக இருப்பது வேதனைக்குரியது.
பள்ளியின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிப்பது அவசியமான ஒன்று என்றாலும், அந்த நடைமுறை ஊழலுக்கு வழிவகுப்பதாக இருக்கக்கூடாது. இந்தச் சிக்கலைத் தீர்க்க உரிமம் புதுப்பிக்கும் முறையை முழுமையாக ‘ஆன்லைன்’ (Online) மயமாக்கி வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உரிய பதில் வழங்கப்பட வேண்டும் என்ற காலக்கெடுவை நிர்ணயிப்பதோடு, தவறும் பட்சத்தில் அது தானாகவே புதுப்பிக்கப்பட்டதாகக் கருதப்படும் (Deemed Approval) விதியைக் கொண்டு வர வேண்டும். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதற்கு ஏதுவான ஓட்டைகளை அடைப்பதன் மூலமே இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க முடியும்.
