தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் கூடாரத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஓபிஎஸ்-இன் தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான பி.கே.வி. பிரபு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் உள்ளிட்டோர் தங்களை ஆளுங்கட்சியில் இணைத்துக் கொண்டது ஓபிஎஸ் தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அவரது வலதுகரமாக விளங்கிய வைத்திலிங்கமும் திமுகவிற்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் திமுகவில் இணைவார் என கூறப்படுகிறது. 2021-ல் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ‘தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் தனிப்பயணம் மேற்கொண்டு வரும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு, தனது நம்பிக்கைக்குரிய தளபதிகளே விலகிச் செல்வது பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் இணைபவர்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அல்லது கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து நிகழும் இந்த அரசியல் மாற்றங்கள், தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் கொண்டுள்ள செல்வாக்கைச் சிதைக்கும் நோக்கில் திமுக முன்னெடுக்கும் வியூகமாகவே அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.
