30 ஆண்டு அமெரிக்க வாழ்க்கை…! கிரீன் கார்டு வாங்க சென்ற இந்திய வம்சாவளி பெண் கைது…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on மார்கழி 16, 2025

Spread the love

அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 60 வயதான பப்பிலி கவுர் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், கிரீன் கார்டு நேர்காணலின் இறுதிச் சுற்றின்போது திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 1994 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருவதுடன், தனது கணவருடன் சேர்ந்து ‘நடராஜ் குவிசின் ஆஃப் இந்தியா அண்ட் நேபாளம்’ என்ற உணவகத்தையும் நடத்தி வந்துள்ளார். மேலும், ஒரு நிறுவனத்தில் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.

பப்பிலி கவுர் தனது கிரீன் கார்டு விண்ணப்பத்திற்கான பயோமெட்ரிக் பதிவுக்குச் சென்றபோது, குடியேற்ற அதிகாரிகள் அவரை திடீரெனக் கைது செய்துள்ளனர். கைதுக்கான காரணம் என்ன, எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார் போன்ற எந்தத் தகவலும் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர் அடிலாண்டோ சிறைக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது.

   

அமெரிக்கக் குடியுரிமை பெற்ற மகளும், கிரீன் கார்டு பெற்ற மருமகனும் உள்ள நிலையில், பப்பிலி கவுர் கைது செய்யப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினருக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லாங் பீச் எம்.பி. ராபர்ட் கார்சியா தலையிட்டு, பப்பிலி கவுரை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளார். குடியேற்ற அதிகாரிகள் கைதுக்கான காரணத்தைத் தெரிவிக்காததால், அவரை விடுவிக்கும் முயற்சிகளில் சிக்கல் நீடிப்பதாகக் கூறப்படுகிறது.