ஹலாலாவுக்காகத் தனது நண்பருடன் உறவுகொள்ள மறுத்ததால், ஒரு பாகிஸ்தானியர் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹலாலா என்பது திருமண உறவின் புனிதத்தைக் காக்கவும், கணவர்கள் கோபத்திலோ அல்லது உணர்ச்சிவசப்பட்டோ அடிக்கடி விவாகரத்து செய்வதைத் தடுக்கவுமே இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு பெண் தனது முதல் கணவரை மூன்று தலாக்குகளுக்குப் பிறகு மீண்டும் மணக்க விரும்பினால், இஸ்லாமியச் சட்டத்தின்படி, அந்தப் பெண் வேறொரு ஆணை (இரண்டாம் கணவர்) சட்டப்பூர்வமாக, உண்மையான நோக்கத்துடன் திருமணம் செய்ய வேண்டும். அந்த இரண்டாவது திருமணம் இயல்பான, நிறைவான திருமண வாழ்க்கையாக இருக்க வேண்டும் .
அந்த இரண்டாவது கணவர் இறந்துவிட வேண்டும், அல்லது அவரும் அந்தப் பெண்ணை இயல்பான முறையில் விவாகரத்து செய்ய வேண்டும். இரண்டாவது கணவரிடமிருந்து பிரிந்த பிறகு, அந்தப் பெண் ‘இத்தா’ (Iddah – காத்திருப்பு காலம், பொதுவாக மூன்று மாதவிடாய் சுழற்சிகள்) காலத்தை முடிக்க வேண்டும். இந்த அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே, அந்தப் பெண் தனது முதல் கணவரை மீண்டும் சட்டப்பூர்வமாக மணந்துகொள்ள முடியும்.
ஆனால் சமீப காலமாக ஹலாலா என்ற பெயரில் நடக்கும் சில சம்பவங்கள் சர்ச்சைக்குரியவையாக உள்ளன. முதல் கணவரை மீண்டும் மணக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, ‘ஒரே இரவில்’ அல்லது ‘தற்காலிகமாக’ வேறொருவரைத் திருமணம் செய்து விவாகரத்து பெறும் பழக்கம் பரவியுள்ளது.
இத்தகைய முன்நிபந்தனையுடன் கூடிய, தற்காலிக ஹலாலா திருமணங்கள் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி செல்லாது என்று பெரும்பாலான அறிஞர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். ஹலாலாவின் உண்மையான நோக்கம், பெண்களைத் தண்டிப்பதோ அல்லது சுரண்டுவதோ அல்ல, மாறாக விவாகரத்து விஷயத்தில் பொறுப்புணர்வைக் கொண்டு வருவதேயாகும்.
