பெங்களூருவின் வீரபத்ரநகரில் பழைய பொருட்கள் சேகரிக்கும் முகமது (45) என்பவர் கட்டிப்போடப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுமார் 6 மணியளவில் கிரிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய கும்பல் முகமதுவின் கை, கால்களைக் கட்டி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
தீக்காயங்களுடன் கட்டை அவிழ்த்துக்கொண்டு சாலையோரம் ஓடிவந்து மயங்கி விழுந்த முகமதுவைப் பார்த்த உள்ளூர்வாசிகள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், உடனடியாக விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீக்காயப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
https://twitter.com/IndiaToday/status/2122999022264995883/video/1
இந்தச் சம்பவம் குறித்து கிரிநகர் காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சக பழைய பொருட்கள் சேகரிப்பாளர்களே முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள மற்ற தொழிலாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதுடன், தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
