இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த டாப் பாக்சில் வைத்திருந்த சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மேக்புக் லேப்டாப், டைரி உள்ளிட்ட முக்கியப் பொருட்கள் சாலையில் தவறி விழுந்துள்ளன. வீட்டிற்குச் சென்ற பிறகே பாக்சைக் காணவில்லை என்பதை உணர்ந்த அந்த வாலிபர், பதறியடித்துக்கொண்டு வந்த வழியிலேயே மீண்டும் சென்று தேடியுள்ளார்.
அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த சிலர், சாலையில் விழுந்த பெட்டியை மின்சார ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் எடுத்துச் சென்றதாகக் கூறியுள்ளனர். காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் காத்திருந்தபோது, தனது லேப்டாப் பெட்டியின் மீது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் கணக்கின் ஐடி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது நினைவுக்கு வந்துள்ளது. உடனே இன்ஸ்டாகிராம் மெசேஜ்களைச் சோதித்துப் பார்த்தபோது, அந்த ஆட்டோ ஓட்டுநர் லேப்டாப் பத்திரமாக இருப்பதாக மெசேஜ் அனுப்பியிருந்தது தெரியவந்தது.
https://www.instagram.com/reel/DcqVuCPObEl/?utm_source=ig_web_copy_link&igsi=NTc4MTIwNjQ2YQ==
உடனடியாக அந்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் சென்று சந்தித்த வாலிபர், தனது விலைமதிப்பற்ற மேக்புக் லேப்டாப்பை மீட்டுக்கொண்டார். அதற்கு நன்றிக்கடனாக அவர் பணத்தைக் கொடுத்தபோதும், அந்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநர் அதனை வாங்க மறுத்துவிட்டார். “இன்றைக்கும் உலகில் நல்ல மனிதர்கள் வாழ்கிறார்கள்” என நெகிழ்ச்சியுடன் வாலிபர் பகிர்ந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது.
