சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மற்றும் எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகரான துருவ் மஜேத்தியா என்ற மணமகன், தனது திருமணத்தின்போது மணமகள் ஆஷிமா கக்கருக்கு ஒரு வேடிக்கையான கிரிக்கெட் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார். இந்த கலகலப்பான தருணம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 65,000க்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட துருவ் மஜேத்தியா, திருமண மேடையிலேயே இந்தச் சட்டபூர்வமற்ற ஒப்பந்தத்தை மணமகளிடம் கொடுத்துள்ளார்.
அந்த ஒப்பந்தத்தில், “நான், மணமகன் துருவ் மஜேத்தியா, என்னுடைய மணமகள் ஆஷிமா, எதிர்காலத்தில் எம்.எஸ். தோனி, சிஎஸ்கே மற்றும் ஆர்.சி.பி அணிகளின் அனைத்துப் போட்டிகளையும் நான் எந்தத் தடையும் இன்றிப் பார்க்க அனுமதித்தால், நான் மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் பேச்சுவார்த்தை இன்றி அவளை மணந்துகொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை ஆஷிமா சத்தமாக வாசித்தபோது, அங்கிருந்த விருந்தினர்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். துருவ் மஜேத்தியா தோனியின் தீவிர ரசிகர் என்பதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கமே நிரூபிக்கிறது. ஏனெனில் அவரது பயனர் பெயரின் முடிவில் தோனியின் ஜெர்சி எண்ணான ‘7’ உள்ளது. இந்த வினோதமான திருமண ஒப்பந்தப் பதிவு 30,000க்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.
