திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் நீலோபர் கபில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், அவர் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. கட்சிக் கூட்டங்களில் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல், பெயரளவுக்கே அவர் அழைக்கப்படுவதால் கடும் அப்செட்டில் இருக்கும் அவர், விரைவில் மாற்றுப் பாதை குறித்து முடிவெடுக்க உள்ளதாக உள்ளூர் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஜோலார்பேட்டை அருகே பொன்னேரியில் நடைபெற உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் விலகி வருவது அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சியின் பலம் குறைந்து வருவது தேர்தல் வெற்றியைப் பாதிக்குமோ என்ற அச்சத்தில் நிர்வாகிகள் குமுறி வருகின்றனர். நீலோபர் கபில் போன்ற செல்வாக்குள்ள சிறுபான்மையினத் தலைவர்கள் வெளியேறுவது, குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
